இந்தியா

டார்ஜ்லிங் பயணத்தில் ‘மோமோஸ்’ செய்து அசத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

EllusamyKarthik

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக அந்த மாநிலத்தில் உள்ள மலை மற்றும் சுற்றுலா தலமான டார்ஜ்லிங் சென்றார். இந்த பயணத்தின் கடைசி நாளான இன்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ‘மோமோஸ்’ விற்பனை செய்யும் கடையில் அவர் மோமோ செய்து அசத்தியுள்ளார். 

தனது டிரேட்மார்க் நீல நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற சேலையில் சென்றிருந்தார் மம்தா. குளிரை தாங்கும் வகையில் சாக்ஸ் மற்றும் சால்வையும் அணிந்திருந்தார். அப்போது அந்த பகுதியல் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து நடத்தும் ‘மோமோஸ்’ விற்பனை செய்யும் கடையில் இருந்த பெண்களுடன் பேசினார். 

அப்போது மோமோஸ் செய்வது குறித்து அந்த பெண்கள், மம்தாவுக்கு விவரித்துள்ளனர். அதை கேட்ட அவர் மோமோ செய்ய பிசைந்து வைத்திருந்த மாவினை எடுத்து, கையில் தட்டி, மோமோவை வடிவமைத்தார். அவர் மோமோ செய்வதை பார்க்க பெருந்திரளான கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டுள்ளது. தொடர்ந்து நேர்த்தியாக மோமோ செய்து முடித்த மம்தாவை மக்கள் பாராட்டியுள்ளனர். 

அப்போது ஆண்களும் இது போல சுய உதவி குழு அமைத்து ஒரு குழுவாக செயல்பட வேண்டும் என்றும், இது வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உதவும் எனவும் மம்தா சொல்லியுள்ளார். அதன் மூலம் மாநில அரசு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் தெரிவித்தார். 

மோமோஸ்?

இது திபெத்திய சிற்றுண்டி என சொல்லலாம். நம் ஊர் பக்கங்களில் பிடிக்கப்படும் கொழுக்கட்டை போல மாவை தட்டிக் கொண்டு, அதனுள் சைவம் மற்றும் அசைவ ஸ்டஃப்களை வைத்து உருவாக்கப்படுகிறது. இதனை Sauce வைத்துக் கொண்டு சாப்பிடுவது வழக்கம்.