திலீப் கோஷ் எக்ஸ் தளம்
இந்தியா

மே.வங்கம் | 'இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க?' கேள்வி எழுப்பிய பெண்கள்; மிரட்டிய பாஜக முன்னாள் எம்.பி.!

மேற்கு வங்கத்தில் பெண்களைப் பார்த்து, “கழுத்தை நெரித்துவிடுவேன்” என முன்னாள் பாஜக எம்.பி. பகிரங்கமாக மிரட்டியுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இக்கட்சியை வரும் தேர்தலில் ஆட்சியிலிருந்து அகற்றவும் மாநிலத்தில் கட்சியை வளர்க்கவும் பாஜக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர் முன்னாள் எம்பி திலீப் கோஷ். இந்தச் சூழலில் அவர் மேற்குவங்கத்தில் புதிய சாலையை திறந்துவைப்பதற்காகச் சென்றார். ஆனால், அவரை வழிமறித்த பெண்கள், “இவ்வளவு நாள் நீங்க எங்க இருந்தீங்க? நீங்க எம்பியா இருந்தப்போ ஒருநாள்கூட நாங்க உங்களைப் பார்த்ததே இல்ல. இப்போ, நம்ம கவுன்சிலர் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதீப் சர்க்கார்) சாலையைக் கட்டிய பிறகு, நீங்க இருக்கீங்க" என்றனர்.

இதைக் கேட்டு கோபமடைந்த திலீப் கோஷ், "நான் அதை உன் அப்பாவோட பணத்துல கட்டல. என் பணத்துல கட்டினேன். பிரதீப் சர்க்காரிடம் போய் இதைப் பத்தி கேளு" என்றார். கோபத்தில் கொந்தளித்த மற்றொரு பெண், "எங்க அப்பாவை ஏன் இழுக்குறீங்க? நீங்க ஒரு எம்.பி., இப்படிப் பேசலாமா?" என்றார்.

இதனால் மீண்டும் கோபப்பட்ட திலீப் கோஷ், "உன்னுடைய பதினான்கு தலைமுறைகளை பற்றியும் பேசுவேன். கத்தாதே. உன் கழுத்தை நெரித்துவிடுவேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எனது எம்.பி. நிதியிலிருந்து இதற்கான பணம் கொடுத்தேன். நீங்க திரிணாமுல் நாய்கள்" என்றார்.

இந்த வாக்குவாதம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அருகிலுள்ள கரக்பூர் டவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. அதற்குள், பெண்கள் அவரது காரைச் சுற்றி வளைத்தனர். இதனால் கோஷ் அந்தப் பகுதியை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திலீப் கோஷ், ”இந்தப் போராட்டத்தை திரிணாமுல் கட்சி திட்டமிட்டுள்ளது. இவர்கள் நாய்கள்; சந்தர்ப்பவாதிகள். எனது பதவிக் காலத்தில் அனுமதிக்கப்பட்ட MPLAD நிதிப் பணத்தில் இந்தச் சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டேன். அதைத் திறந்து வைக்க நான் அங்கு சென்றேன். ஆனால் உள்ளூர் கவுன்சிலரின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர். பிரதீப் சர்க்கார் தலைவராக இருந்தபோது, ​​நான் ஒரு MLA. இப்போதும் கூட, கரக்பூர் நகராட்சி எனது நிதியுதவியுடன் கூடிய பல திட்டங்களை முடக்கியுள்ளது" என்றார்.

திலீப் கோஷ்

இவ்விவகாரம் குறித்து திரிணாமுல் கவுன்சிலரும் கரக்பூரின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பிரதீப் சர்க்கார், ”நான் அங்கு இல்லை. ஆனால் அவர் என் தந்தையைக்கூட அவமதித்தார். பெண்களை 500 ரூபாய் தொழிலாளர்கள் என்று அழைத்தார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் கரக்பூரில் எங்குச் சென்றாலும் போராட்டங்கள் நடக்கும். இதுபோன்ற வார்த்தைகள் ஒரு முன்னாள் எம்பிக்கு ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.