மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான முந்தைய பாஜக அரசு அரசியல்வாதிகளின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டி உத்தவ் தாக்ரே தலைமையிலான புதிய அரசு இரண்டு அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைக்க உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசிகளை முந்தைய ஃபட்னாவிஸ் அரசாங்கம் ஒட்டுக்கேட்டதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜகவின் ஆட்சியில் உள்துறைக்கு பொறுப்பாக இருந்த ஃபட்னாவிஸ், காவல்துறையினருக்கோ அல்லது எந்தவொரு அரசாங்க இயந்திரத்திற்கோ இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றார்.
“இது குறித்து விசாரிக்க இரண்டு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். அந்த விசாரணையை முடிக்க நாங்கள் அவர்களுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளோம் ”என்று அனில் தேஷ்முக் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீகாந்த் சிங், இணை ஆணையர் (உளவுத்துறை) அமிதேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“இன்று காலை தொலைபேசி ஒட்டுகேட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க உள்துறை அமைச்சரிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்துள்ளது. இது இப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ”என்று கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
முந்தைய பாஜக-சிவசேனா அரசு காங்கிரஸ் மற்றும் என்சிபி தலைவர்களின் தொலைபேசிகளைத் ஒட்டுகேட்டது, அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தியது என்ற என்சிபி தலைவரான அனில் தேஷ்முக் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.