Jahangir Khan web
இந்தியா

தலைமறைவாகி இருந்த ஜஹாங்கிர் 'புஷ்பா' கான் கைது.. யார் இவர்?

பல வாரங்களாகத் தலைமறைவாக இருந்த ஜஹாங்கிர் 'புஷ்பா' கான் நேபாள எல்லைக்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

அதே சமயம் இங்குள்ள ஃபால்டா தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்கள் டேப் கொண்டு மறைக்கப்பட்டதாகவும், வாக்குச்சாவடி ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் பல்வேறு தரப்பினர் புகார் அளித்த நிலையில், அதில் மொத்தம் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டு 24ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருந்த நிலையில், ஃபால்டா மறுதேர்தலில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியிருந்தார். எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இவர், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் உதவியாளர் ஆவார்.

Abhishek Banerjee & Jahangir Khan

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக சிங்கம்' என்று அறியப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பால் ஷர்மா ஜஹாங்கிர் வீட்டிற்குச் சென்று, தேர்தல் நாளன்று வாக்காளர்களை அச்சுறுத்த வேண்டாம் என்று குடும்ப உறுப்பினர்களை எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் சிங்கம் என்றால், நான் புஷ்பா" என்று ஜஹாங்கிர் கான் கூறியிருந்தார்.

ஜஹாங்கிர் கான் மீது ஃபால்டா காவல் நிலையத்தில் மிரட்டிப் பணம் பறித்தல், குற்றவியல் ரீதியாக அச்சுறுத்தல் விடுத்தல், அரசியல் வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்தல் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Abhishek Banerjee & Jahangir Khan

இதில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கு தொடர்பாக இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது நேபாள எல்லைக்கு அருகே சிறப்புப் பணிப் படையினரால் (STF) ஜஹாங்கீர் கான் கைது செய்யப்பட்டுள்ளார். பல குற்றவியல் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாகச் சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து கான் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.