‘நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறோம் ஆனால் பாஜக பிரிவினையை விரும்புகிறது’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரத் துறைக்கும் மற்றும் மின்சார திட்டத்திற்கும் முன்னுரிமை அளிப்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் சுத்தமான மாநிலத்தை உருவாக்கவும், குடிநீர் வசதி மற்றும் காற்று மாசு இல்லாத சூழலை கொண்டு வருவதிலும் அதிக அக்கறை செலுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
நல்ல அரசை ஏற்படுத்த வேண்டும் என்றும் குடியுரிமை பிரச்னைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக ‘இந்து vs முஸ்லிம்’ குறித்த விஷயங்களை மட்டுமே பேசுகின்றது என்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
“நாங்கள், இன்னும் அதிகமான பள்ளிக் கூடங்களை உருவாக்குவோம் என சொல்கிறோம். அவர்களோ (பாஜக) ‘ஷாஹீன் பாக்’ என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், மேலும் நிறைய மருத்துவமனைகளை உருவாக்குவோம் என்று அவர்கள் ‘ஷாஹீன் பாக்’ என்று கூறுகிறார்கள்.
தடையற்ற மின்சாரம் பற்றி நான் பேசுகிறேன்; அதற்கும் அவர்கள் ‘ஷாஹீன் பாக்’ என்று கூறுகிறார்கள். இதைவிட்டால் டெல்லியில் வேறு பிரச்னை இல்லையா?”என கெஜ்ரிவால் கூறினார். மேற்கொண்டு அவர், நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறோம் அவர்கள் (பாஜக) பிரிவினையை விரும்புகிறார்கள் என்றார்.
‘ஷாஹீன் பாக்’ என்பது தெற்கு டெல்லியில் உள்ள ஒரு இடமாகும். இங்கு குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக போராட்டங்கள் நடந்தன. ஆகவே அதனை பாஜக, ஒரு அடையாள அரசியலாக வைத்து பரப்புரை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.