இந்தியா

சீனாவை சமாளிக்க உலகளாவிய பார்வை தேவை - ராகுல்காந்தி

webteam

உலகளாவிய பார்வை இல்லாமல் சீனாவை சமாளிக்கமுடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

ராகுல்காந்தி சமீபத்தில் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், சரியான பார்வை, உலகளாவிய பார்வை இல்லாமல் சீனாவைக் கையாளமுடியாது என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும், “அரசியலைப் பாருங்கள், நமக்குள்ளேயே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் சண்டையிடுகிறார். நாம் வளர்ச்சி அடைவதற்கு எந்த தெளிவான பார்வையும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது” என்று ராகுல் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, பிரதமர் மீதான விமர்சனங்களைக் கூர்மைப்படுத்தியுள்ளார். தன்னுடைய இமேஜை 100 சதவீதம் உயர்த்துவதிலேயே அவர் கவனம் செலுத்துவதாக சாடியுள்ளார்.   

“இந்தியாவில் கைப்பற்றப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்தப் பணியைச் செய்வதில் ஈடுபட்டுள்ளன. ஒரு மனிதரின் இமேஜ் என்பது தேசியப் பார்வைக்கு மாற்றாக இருக்காது” என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். டிவிட்டர் செய்தியுடன் 2 நிமிட வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில்  20 இந்திய வீரர்களின் உயிரிழப்புக்குப் பிறகு சீனாவுடனான இந்தியாவின் உறவைப் பற்றியும் பேசியுள்ளார். “நீங்கள் அவர்களை (சீனா) வலிமையுடன் அணுகினால், அவர்களை சமாளிக்கமுடியும்” என்று கூறியுள்ள ராகுல், “நீண்டகாலம் மற்றும் பெரியதாக சிந்திக்காவிட்டால், நாம் மாபெரும் வாய்ப்புகளை இழக்கநேரிடும்” என்றும் எச்சரித்துள்ளார்.