ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிறன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்து அகல்விளக்கை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்பட்டுவரும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கை சிறந்த முறையில் கடைபிடித்து, வீட்டிற்குள் மக்கள் சிறந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாடு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக கூறிய பிரதமர், நாம் தனிமையில் இருந்தாலும், ஒன்றிணைந்து நாட்டை பலப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறினார்.
ஊரடங்கை கடைபிடிக்கும் மக்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், கொரோனா ஏற்படுத்தியுள்ள இருளை போக்கும்வகையில் வெளிச்சத்தை உண்டாக்குவோம் என்று கூறியுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேநேரத்தில் வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்றும் 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்திக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
வீட்டிற்குள் இருந்தபடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மார்ச் 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கின்போது, மக்கள் அனைவரும் பால்கனிகளில் இருந்து கை தட்டி, மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்குமாறு கூறிய பிரதமர், தற்போது வரும் ஞாயிறன்று மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஒளிரச்செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ஒவ்வொரு உழைக்கும் ஆண்களும், பெண்களும் மற்றும் தொழிலதிபர்கள் முதல் தினக்கூலிகள் வரை அனைவரும் பொருளாதார சரிவை மீட்டெடுப்பதற்கான வழிகள் பற்றி நீங்கள் அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தனர்
ஏப்ரல் 5ம் தேதி விளக்கேற்றுவதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். ஆனால், அதற்கு பதிலாக, பிரதமர் பொருளாதார வல்லுநர்கள், தொற்று நோயியல் நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.