இந்தியா

நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் - விப்ரோ சேர்மன் பிரேம்ஜி

ச. முத்துகிருஷ்ணன்

விப்ரோ எந்தவிதமான நேர்மை மீறல் அல்லது துன்புறுத்தலுக்கு எதிரானது என்றும், இரண்டில் ஏதேனும் ஒன்றை மீறினால் ஊழியர் தனது வேலையை இழக்க நேரிடும் என்றும் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக தகவல் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி ஒரு பொது மேடையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.

நேற்று (அக்டோபர் 19) பெங்களூரில் நடந்த நாஸ்காம் தயாரிப்பு மாநாட்டில் பேசிய விப்ரோ சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி , “எனது நிறுவனத்தில் முதல் 20 தலைவர்களில் ஒருவரை "பெரிய ஒருமைப்பாடு மீறல்" செய்ததாகக் கண்டறியப்பட்ட பத்து நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்யும் முடிவை எடுத்தோம். அந்த நபர் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவர் நேர்மை தவறியது நிரூபணம் ஆனதால் அந்த கடினமான முடிவை மேற்கொள்ள வேண்டியிருந்தது.” என்று கூறினார்.

அந்த மூத்த ஊழியர் ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களில் பணியாற்றும் மூன்லைட்டிங் (MoonLighting) செய்தாரா அல்லது வேறு ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்த தகவலை பிரேம்ஜி தெரிவிக்கவில்லை. நிகழ்வின் முடிவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் பிரேம்ஜி பதிலளிக்காமல் கடந்து சென்றதால் டிஸ்மிஸ் ஆக்கும் அளவுக்கு அந்த மூத்த ஊழியர் செய்த நேர்மை மீறல் என்ன என்பது குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை.