சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், சபரிமலையில் இப்போதுள்ள சூழ்நிலை காரணமாக செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆண்களுக்கு நிகராக பெண் பக்தர்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சில பெண்கள் கடந்தாண்டு சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். பலர், பக்தர்கள் போராட்டம் காரணமாக தடுத்த நிறுத்தப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியுள்ளது. எனினும், இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. இதனிடையே சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும், வர விரும்பினால் உரிய அனுமதி பெற்று கடிதத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்துவிட்டது.
இந்தச் சூழலில், கடந்த ஆண்டை போலவே, இம்முறையும் சபரிமலை கோயிலுக்கு செல்லும் நோக்கில் கொச்சிக்கு வந்த புனேவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் வந்த பிந்து என்ற பெண் மீது பக்தர் ஒருவர் மிளகு தூள் ஸ்பிரே அடித்து எதிர்ப்பை பதிவு செய்தார். இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காமல் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து ரெஹானா பாத்திமா, பிந்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது " சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது. கோயிலுக்குள் காவல்துறை நிறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இப்போதுள்ள சூழலில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தவிட முடியாது. இவ்வழக்கை தொடர்ந்த மூன்று பெண்களுக்கும் ஏற்கெனவே பாதுகாப்பு உத்தரவு இருக்கிறது. சபரிமலை மறு சீராய்வு மனுக்களை விரைவில் விசாரிக்கப்படும்" என தெரிவித்தனர்.