இந்தியாவில் உள்ள அனைவரையும் சைவத்துக்கு மாறுங்கள் என எங்களால் உத்தரவிட முடியாது என வழக்கு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுநல வழக்கை ஒன்றை தாக்கல் செய்தன. அந்த மனுவில் இயற்கையான சைவ உணவுகளே உடலுக்கு ஆரோக்யம் என்றும் அதனால் இந்தியாவில் மாமிசத்தை தடை விதிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தன. இந்த வழக்கு நீதிபதி மதன் பிலோகூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நாட்டில் உள்ள அனைவரும் சைவமாக மாற வேண்டுமென நீங்கள் விரும்புகிறீகளா? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்தியாவில் உள்ள அனைவரையும் சைவத்துக்கு மாறுங்கள் என எங்களால் உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த ஆண்டு மாடுகளை இறைச்சிக்காக வாங்கவோ விற்கவோ கூடாது எனவும் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உத்தரவை திரும்பப்பெறக்கூறி நாடு முழுவதும் போராட்டம் வலுத்தது. பின்னர் இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.