இந்தியா

தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் தர முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் தர முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

rajakannan

டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பொதுச் சின்னமாக குக்கரை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

குக்கர் சின்னத்தை தங்களுக்கு பொதுச் சின்னமாக வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கூறி உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. வேட்புமனுத் தாக்கல் நாளை உடன் முடிவடைய நிலையில், இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமமுகவுக்கு பொதுச் சின்னமாக குக்கரை தர முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. 

‘தினகரன் கட்சி இதுவரை பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாததால் அமமுகவை ஒரு குழுவாகத்தான் பார்ப்போம். அவர்களின் வேட்பாளர்களை  சுயேச்சைகளாகத்தான் கருதுவோம். அதனால், நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது. அதேபோல், இடைத்தேர்தலுக்கும் ஒதுக்க முடியாது’ தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்தனர். இதனைகேட்ட நீதிபதிகள், தாங்கள் சொல்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள் என கேட்டனர். ஆனால், தங்களிடம் தற்போது கையில் எவ்வித ஆவணங்களும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்தனர். 

இந்த பதிலை கேட்டது கடும் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி, தனது கண்டனத்தையும் பதிவு செய்தனர். அதோடு, நாளை காலை 10.30 இந்த வழக்கு தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படுகிறது. 

ஏற்கெனவே இரட்டை இலை தொடர்பான வழக்கிலும் தினகரனுக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கும் மேலும் தள்ளிப் போயுள்ளது. இதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் தேர்தலின் போது அது அமமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.