இந்தியா

"பதிலடி கொடுக்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம்" - விமானப்படை தளபதி !

"பதிலடி கொடுக்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம்" - விமானப்படை தளபதி !

jagadeesh

எந்தவொரு சூழலிலும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இந்திய விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடந்த ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படைத் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கலந்துகொண்டார். அப்போது இந்தியா - சீனா இடையே அண்மையில் ஏற்பட்ட பிரச்னை குறித்துப் பேசினார்.

அதில் "மிகவும் சவாலான சூழ்நிலையில் மகத்தான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எந்த நிலையிலும் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்குத் தீர்மானமாக இருக்கிறோம். எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கல்வானில் துணிச்சல் மிக்க வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " பாதுகாப்பு சூழ்நிலை கருதி நமது பகுதியில் ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். ராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்ட போதும், உயிரிழப்பு ஏற்படுவதற்குக் காரணமாகச் சீனாவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எனினும், எல்லைக் கோட்டுப் பகுதியில் தற்போதைய நிலைமையை அமைதியாகத் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன" என்றார் பதாரியா.