இந்தியா

“ம.பி.யில் அரசை வீழ்த்துவதில் எங்களுக்கு துளிகூட விருப்பமில்லை”- சிவராஜ் சிங் சவுகான்

Rasus

முதல்நாளில் சொன்னதுபோலவே மத்தியப் பிரதேசத்தின் அரசை வீழ்த்துவதில் எங்களுக்கு துளி கூட விருப்பம் இல்லை என சிவராஜ் சிங்
சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் கமல்நாத் அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே இன்று மாலை காங்கிரஸ் எம் எல் ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசியல் நிலவும் குறித்து அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ இது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விஷயம். இதில் எந்தவொரு கருத்தையும் கூற நான் விரும்பவில்லை. நாங்கள் முதல் நாளில் கூறியது போலவே ஆட்சியை கவிழ்ப்பதில் எங்களுக்கு துளி கூட விருப்பம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 230 இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 114 எம் எல் ஏக்களும், பாரதிய ஜனதாவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் அரசுக்கு 4 சுயேட்சைகள், பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்எல்ஏவும் ஆதரவு அளித்து வருகின்றனர்.