தொடர் கனமழை காரணமாக பாண்டப் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் வழங்கல் தடைபட்டுள்ளது.
வெள்ளநீர் புகுந்ததால் பிரஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) வளாகத்தில் உள்ள நீர் வடிகட்டுதல் ஆலைகள் மூடப்பட்டது. “சுத்திகரிப்பு நிலையத்தில், மீண்டும் நீர் சுத்திகரிப்பு செய்து மும்பையின் நீர் விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு இன்னும் சில மணிநேரங்கள் ஆகலாம். நீர் வழங்கல் மீட்டமைக்கப்பட்ட பின்னர், குடிப்பதற்கு முன்பு தண்ணீரை கொதிக்கவைக்குமாறு மும்பைவாசிகளை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது” என்று பிஎம்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பி.எம்.சியின் ஹைட்ராலிக்ஸ் துறையின் தலைமை பொறியாளர் அஜய் ரத்தோர் கூறுகையில், பாண்டப் நீர் வளாகத்தில் வெள்ளநீர் நுழைந்த உடனேயே முன்னெச்சரிக்கையாக மின்சார வழங்கலும், சுத்திகரிப்பு முறையும் மூடப்பட்டது எனத் தெரிவித்தார்.