இந்தியா

குளு குளு சிம்லா.. குடிநீருக்கு கையேந்துகிறது..

webteam

 “புதிய வானம் புதிய பூமி - 
எங்கும் பனிமழை பொழிகிறது 
நான் வருகையிலே என்னை வரவேற்க 
வண்ணப் பூமழை பொழிகிறது”

இது அன்பே வா படத்தில் வரும் பாடல் வரிகள் சிம்லாவின் அழகு குறித்து எம்ஜிஆர் பாடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாடலின் மூலம் தான் தமிழகத்தில் பலர் சிம்லா குறித்து கேள்விபட்டிருப்பார்கள். கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் படமும் சிம்லாவின் இயற்கை அழகை அப்படியே படம் பிடித்திருக்கும். கோடை காலத்தில் சுற்றுலா செல்ல முடிவெடுத்தால் பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் இடம் சிம்லா.

இயற்கை எழில் கொஞ்சும் சிம்லாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இமயமலை தொடரின் வடமேற்கு பகுதியில் இந்த மலை நகரம் அமைந்துள்ளது. இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று - என் இதயத்தைத் தொடுகிறது என்ற பாடல் வரிகள் சிம்லாவின் பருவநிலையை நமக்கு உணர்த்துகிறது. தற்போது இந்த நகரமே தண்ணீர் தட்டுப்பாட்டால் கடுமையாக அவதியுற்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க சிரமப்பட்டு வருகின்றனர். 


இமாச்சலபிரதேச உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை தானாக முன்வந்து எடுத்து அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. கட்டுமானப்பணிகள் மற்றும் வாகனங்களை கழுவுவதற்கு தண்ணீர் விநியோகிக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் கட்டணம் செலுத்தவில்லை என்றால் ஹோட்டல்களின் இணைப்பை துண்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. எந்த ஒரு தனி நபருக்கும் தண்ணீர் டேங்குகள் வழங்கக்கூடாது.  அமைச்சர்கள், நீதிபதி, அரசு அதிகாரி யாருக்கும் வழங்கக்கூடாது என நீதிமன்றம் கண்டிப்பு காட்டியுள்ளது. முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிம்லாவில் நடைப்பெற்ற போராட்டத்தின் காரணமாக சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது ஆத்திரத்தை கொட்டி தீர்க்கின்றனர்.

  மலைகளை விரும்பும் சுற்றுலா பயணிகள் கொஞ்ச நாட்கள் சிம்லா வருவதை தவிருங்கள். அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை, மோசமான தண்ணீர் மேலாண்மை, பருவ மாற்றத்தின் காரணமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு சரியாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. பல இடங்களில் கழிவுநீர் விநியோகிக்கப்படுகிறது. ஜூன் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகைபுரிந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் தற்போதே குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம் என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர் சிம்லா வாசிகள். 

தண்ணீர் பாட்டில் விநியோகஸ்தர்கள் பேசுகையில், பொதுவாக இப்பகுதிக்கு நாங்கள் 400 வாட்டர் பாட்டில் பாக்கெட்டுகள் அனுப்புவோம் ஆனால் தற்போது 700 ஆக உயர்ந்துள்ளது. இதுமேலும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது என்றார். தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக்கூட்டம் கூட்டப்பட்டது. மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் வண்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பல இடங்களில் பிரச்னைகள் வருவதால் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிம்லா முழுவதும் மக்கள் காலிக்குடங்களை வைத்துக்கொண்டு தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.