தண்ணீர் பற்றாக்குறையால் கர்நாடகா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் மருத்துவர்களும் திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தென் மாநிலங்களில் பருவமழை பொய்த்த நிலையில், தற்போது நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் குடிநீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் கலபுரகி, பெல்லாரி மற்றும் பிதார் மாவட்டங்களில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்த பின், உபகரணங்களை தூய்மை செய்வதற்கு கூட தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கலபுரகியில் நடக்கவிருந்த மருத்துவ முகாம்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் குடிநீர், கழிவறை பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கும் கடும் பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.