இந்தியா

நொடியில் உருண்டு விழுந்த பாறை; தூக்கியெறியப்பட்ட இளைஞர்கள் - உறைய வைக்கும் காட்சி

நொடியில் உருண்டு விழுந்த பாறை; தூக்கியெறியப்பட்ட இளைஞர்கள் - உறைய வைக்கும் காட்சி

சங்கீதா

கேரள மாநிலத்தில் கடந்த 16-ம் தேதி மலமுகலில் இருந்து பாறை ஒன்று உருண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில், இளைஞர் ஒருவர் உயிர் இழந்த நிலையில், அந்த விபத்து குறித்து கொடூரமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர், தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றுலாத் தலமான வயநாடு பகுதிக்கு சென்றுள்ளனர். வயநாடு தாமரசேரியில் உள்ள மலைப் பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தபோது, மலைமேல் இருந்து பெரிய பாறை ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்து இளைஞர்களில், அபிநவ் மற்றும் அனீஷ் ஆகிய இருவர் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்து விழுந்தது.

பாறை விழுந்த வேகத்தில், கணநேரத்தில் இருவரும், சாலையின் மறுபுறமுள்ள தாழ்வானப் பகுதியில் 200 அடிக்கு பாறையுடன் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, 20 வயதான அபிநவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிர் இழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த 21 வயதான அனீஷ் உயிர் தப்பினாலும், சிகிச்சையில் உள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த இருவரின் பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களில் ஒருவர் தனது பயணத்தை வீடியோ பதிவு செய்துகொண்டே வந்துள்ளார். அதில் இந்த விபத்து காட்சியும் பதிவாகியுள்ளது. தற்போது இந்த கொடூர காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.