விவேகானந்தர் சிலை அமைப்பது தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
பல்கலைக் கழக வளாகத்தில் விவேகானந்தரின் முழு உருவ சிலை அமைக்க ஜேஎன்யு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிர்வாகத்தின் முடிவை பல்கலைக் கழக ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விமர்சித்துள்ளனர். வளாகத்தில் நூலகம் அமைத்து பல்கலைக் கழகத்தை மேம்பாடு அடைய செய்வதற்கு பதிலாக நிதியை சிலை அமைக்க செலவிடுவதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிலை அமைப்பதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்று மாணவர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு பல்கலைக் கழகம் பதில் அளிக்காததால் சிலைக்கான நிதி குறித்த தகவலை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவர் சாய் பாலாஜி கூறுகையில், “நூலகம் அமைக்க நிதி இல்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் கூறுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு மெரீட் உதவித் தொகை வழங்கவும் நிதி இல்லை என நிர்வாகம் கூறுகிறது. ஆனால், சிலைகள் அமைப்பதில் மும்முரமாக உள்ளது” என்றார். நூலகத்திற்கான நிதியை 8 கோடி ரூபாயில் இருந்து ரூ1.7 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக இன்று பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலை அமைக்க தன்னார்வலர்கள் பணம் கொடுக்க முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கான நிதி எதுவும் குறைக்கப்படவில்லை என்றும் நிதி கேட்டு யுஜிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வளாகத்தில் சிலை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதமே ஜேஎன்யு செயற்குழு கவுன்சில் ஒப்புதல் அளித்திருந்தது. சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது, அந்தப் பணிகளை மேற்பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது.