சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய மசோதாவை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவுக்கு, எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
மக்களவையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனை அடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து மசோதாவை விவாதிக்க மத்திய அரசு செவிசாய்த்தது.
அதன் அடிப்படையில் எதிர்க்கட்சி எம்.பி. க்கள் அடங்கிய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
வக்ஃப் வாரியம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் கடுமையான கருத்து மோதல் நீடித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த கூட்டம் நடைபெற்றபோது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, 10 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. அதே சமயத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் சமர்ப்பித்த 14 திருத்தங்கள் பெரும்பான்மையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்தக் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்றும் அதில் குழுவின் அறிக்கை இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, போதிய ஆவணங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்காமல், குழுவின் அறிக்கை இறுதிச் செய்யப்படுவதாக திமுக எம்.பி. ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
வக்ஃப் வாரிய மசோதாவை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட குழு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க கெடு அளிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பம் முதலே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர்களிடையே தொடர்ந்து மோதல் நிலவியதால், அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கையை பரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.