waqf, modi x page
இந்தியா

இரு அவைகளிலும் நிறைவேறிய வக்ஃப் திருத்த மசோதா.. பிரதமர் மோடி பாராட்டு!

மாநிலங்களவையிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Prakash J

வக்ஃப் வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு i-n-d-i-a கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளையும் பதிவு செய்தனர். வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் அதற்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியுள்ளன. அடுத்தக்கட்டமாக, இந்த மசோதா மீது மாநிலங்களவையில், ஏப்ரல் 3ஆம் தேதி விவாதம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும். நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வக்ஃப் அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்து வந்தது. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி” எனப் பதிவிட்டுள்ளார்.