மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து, சட்டத் திருத்தத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது 8 மணி நேர விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மசோதாவை அறிமுகம் செய்து வைத்து மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் பேசினார்.
அதில், “ வக்ஃப் மசோதா முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளில் தலையிடாது. இது சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான விஷயம் மட்டுமே. வக்ஃப் வாரியத்தில் ஷியாக்கள், சன்னிகள், போஹ்ராக்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத நிபுணர்களைச் சேர்க்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. காங்கிரஸ் 123 அரசு சொத்துக்களை வக்ஃப் வாரியத்திடம் ஒப்படைத்து. நாங்கள் மசோதாவைக் கொண்டு வரவில்லை என்றால், நாடாளுமன்ற கட்டிடமும் வக்ஃப் சொத்தாகக் கூறப்படும்.
அரசியல் சாசனத்தின் வரம்புக்குள்ளேயே மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன; நாங்கள் நேர்மையான நோக்கங்களுடன் இந்த மசோதாவை விவாதத்துக்கு கொண்டு வந்துள்ளோம்'.
இந்தியாவில்தான் உலகிலேயே மிகவும் அதிக அளவில் வக்ஃப் சொத்துக்கள் உள்ளன; இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் தங்கள் இதயத்தை தொட்டுப் பார்க்க வேண்டும். வக்ஃப் சொத்துக்கள் அதிகரித்தாலும், அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் அதிகரிப்பதில்லை; வக்ஃப் சொத்துக்கள் சரியாக நிர்வாகிக்கப்பட்டால் தேசத்தின் தலைவிதியே மாறிவிடும்
வக்ஃப் மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது தவறான பிரசாரம்; CAA விவகாரத்திலும் இப்படி தவறான வதந்திகள் பரப்பப்பட்டன. நம்பிக்கை என பொருள்படும் வகையில் வக்ஃப் சட்ட தலைப்பின் சுருக்கம்' என ஆங்கிலத்தில் உள்ளது.
நேர்மையாக வக்ஃப் சொத்துக்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டால், ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மசோதாவில், அரசு நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டால், கலெக்டர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரி தீர்ப்பளிப்பார் என்ற கூட்டுக்குழு பரிந்துரையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். கூட்டுக்குழு பரிந்துரைத்தபடி, தீர்ப்பாயத்தில் நிலையான பதவிக்காலம் கொண்ட 3 உறுப்பினர்கள் இருப்பார்கள். தீர்ப்பாயத்தின் உத்தரவில் அதிருப்தி அடைந்தால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
எனவே, முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்களின் உரிமையை வழங்குவதன் மூலம் அரசாங்கம் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வர நினைக்கிறது. வக்ஃப் சட்டதிருத்த மசோதா இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பாதிக்காது. ” போன்றவற்றை பேசியுள்ளார்.
இந்நிலையில், கிரண் ரிஜிஜுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. வாரிய மசோதா மீதான விவாதத்திற்கு பிறகு வாக்குப்பெடுப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.