ஆன்லைன் வெப்சீரிஸ்-களுக்கு விதிமுறைகள் விதிக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உட்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள், வெப் சீரீஸ் எனப்படும் இணைய தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்த தொடர்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனம் ஒன்றில் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அமேசான், நெட் பிளிக்ஸ் போன்ற இணைய வீடியோ தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும் இடம்பெறுவதால் இவற்றைத் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சக அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இம்மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.