இந்தியா

குழந்தைகளை தோளில் சுமந்தவாறு சொந்த ஊருக்கு 150கிமீ தூரம் நடந்து சென்ற குடும்பம்!!

குழந்தைகளை தோளில் சுமந்தவாறு சொந்த ஊருக்கு 150கிமீ தூரம் நடந்து சென்ற குடும்பம்!!

webteam

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இந்தியாவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமூக விலகல் வேண்டுமென்பதால் பிரதமர் மோடி 21 ஊரடங்கிற்கு உத்தரவிட்டார்.

ஊரடங்கு உத்தரவு என்பதால் பேருந்துகள், ரயில் சேவை நிறுத்தப்பட்டது. திடீரென போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பலர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்குச் சென்று தினக்கூலியாக வேலை பார்த்தவர்கள் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் கூலித்தொழில் செய்து வந்த பண்டி என்பவரின் குடும்பம் நடந்தே தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளது. 5 பேர் கொண்ட அவரின் குடும்பத்தினர் டெல்லியில் இருந்து உபியில் உள்ள ஒரு கிராமத்திற்கு 2 நாட்கள் நடந்தே சென்றுள்ளனர். தன்னுடைய 10 மாதக்குழந்தையை தோளில் சுமந்துகொண்டு பண்டி நடக்க, அவரது குடும்பத்தினர் கிட்டத்தட்ட 150கிமீ தூரம் நடந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

கையில் போதுமான பணம், உணவு ஏதுமில்லாமல் 3 குழந்தைகளுடன் அவர்கள் 150 கிமீ நடந்தே வந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த  பண்டியின் மனைவி நாங்கள் எதை சாப்பிடுவது? கற்களை சாப்பிட முடியாதே என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் உதவி செய்ய யாருமே இல்லை எனத் தெரிவித்த பண்டி, சப்பாத்தியும், தொட்டுக்கொள்ள உப்பும் கிடைத்தாலே போதும் எங்களுக்கு. அது கூட டெல்லியில் கிடைக்கவில்லை. அதனால் தான் சொந்த ஊர்க்கு நடந்தே புறப்பட்டோம் எனத் தெரிவித்துள்ளார்