இந்தியா

இரவிலும் வாக்குப்பதிவு : ஆந்திராவில் தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி

webteam

ஆந்திராவின் பல வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு இயந்திரங்கள் செயல்படாத நிலையில், அங்கு வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

17ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு  உத்தரப்பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைபெற்றது. ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. எனவே பிரதான கட்சிகளாக உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்‌கிரஸ் தொண்‌டர்கள் இடையே ‌பல இடங்களில் மோதல் ஏற்பட்டு, பதட்டமான சூழல் காணப்பட்டது. அங்கு 20 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டது.

ஆனாலும், பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் செயல்படாததால் வாக்களிக்க முடியாமல் பல வாக்காளர்கள் திரும்பினர். காலை 9.30 மணி வரை சில இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்நிலையில் 400 வாக்கு மையங்களுக்கு மட்டும் நேரத்தை அதிகரித்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவை நடத்தியுள்ளது. இதனால் இரவிலும் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே ஆந்திராவில் வாக்குப்பதிவு சதவிகிதம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.