டெல்லியில் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் பால் அபிஷேகம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விரைவில் டெல்லியில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களை செய்வது வழக்கம். அதுபோல ஒரு சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரால் டெல்லி சாஸ்திரி பூங்காவில் நிகழ்ந்துள்ளது. கிழக்கு டெல்லியை சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன். இவர் அப்பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் கழிவுப் பொருட்களால் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார்.
கழிவுகளை அவர் இறங்கி அகற்றும் வீடியோவை தொண்டர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். குப்பையை அகற்றியபோது அசுத்தம் அடைந்த ஹசீப்-உல்-ஹசன் மீது ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பால் ஊற்றி குளிப்பாட்டினர். இந்த பால் அபிஷேக வீடியோவையும் தொண்டர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர, அது வைரலாகத் துவங்கியது. பலமுறை புகார் அளித்தும் பா.ஜ.க கவுன்சிலரும், பா.ஜ.க எம்எல்ஏ.,வும் உதவி செய்யவில்லை எனவும் அதனால் தானே களத்தில் இறங்கி வேலை செய்ததாகவும் ஹசீப்-உல்-ஹசன் கூறினார்.