வோடாஃபோன் நிறுவனத்தின் நெட்வொர்க் இந்தியாவின் பல இடங்களில் முடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியாவிலுள்ள முக்கிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களில் வோடாஃபோன் ஒன்று. இந்த நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சேவை கடந்த இரண்டு நாடகளாக சரி வர இல்லாததால், அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் தங்களது பிரச்னைகளை பதிவிட்டு வருகின்றனர்.
வோடாஃபோன் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் கூறியுள்ள நிலையில், புகார் தெரிவிக்கும் எண்ணான 198ம் முடங்கியுள்ளதாக வாடிக்கையாளர் ஒரு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தச் சேவை பாதிப்பால் கர்நாடகா, டெல்லி ,மும்பை ஆகிய பகுதிகளில் நெட்வொர்க் பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் இந்தச் சேவை பாதிப்பு குறித்து வோடாஃபோன் நிறுவனத்திற்கு புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து வோடாஃபோன் நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில், “இது ஒரு தாற்காலிக சேவை பாதிப்பு தான். நாங்கள் இந்தப் பாதிப்பை சரி செய்வதற்கு சிறிது நேரம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனம் இணைக்கப்படும் பணிகளின் போது இது போன்ற சேவை பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டது. அதனை அந்நிறுவனம் சரி செய்தது. இந்நிலையில் மீண்டும் வோடாஃபோன் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே ஏர்சேல் நிறுவனம் இந்தியாவில் முடப்பட்ட நிலையில் பலர் அதிலிருந்து ஏர்டேல் மற்றும் வோடாஃபோன் சேவைகளுக்கு மாறினர். இதனால் தற்போது வோடாஃபோன் நிறுவனத்தின் சேவை பாதிப்பு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.