பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது இளமைப்பருவ காதலி 18 வயதிலேயே புற்றுநோயால் இழந்ததை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசியுள்ளார்.
விவேக் ஓபராய் பிரியங்கா ஆல்வாவை 2010 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமேயா நிர்வாணா என்ற மகளும், விவான் வீர் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய விவேக் ஓபராய், தனது இளமை பருவ காதலை நினைவுகூர்ந்து பேசியுள்ளார். அதில், தனது இளமைபருவ காதலியை புற்றுநோயால் இழந்ததை வருத்தத்துடன் வெளிப்படுத்தினார்.
அந்த நேர்கானலில் தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விவேக் ஒபராய் , ”எனது பள்ளி நாளில் ஒரு பெண்ணை விரும்பினேன். இவள்தான் என் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று நான் நினைத்தேன். கிட்டத்தட்ட நாங்கள் 5-6 ஆண்டுகளாக உறவில் இருந்தோம். அதன்பின், நாங்கள் இருவரும் ஒன்றாக கல்லூரிக்குச் செல்வோம். அவளை திருமணம் செய்து கொள்வது, குழந்தைகளை பெற்றுவது என்று கற்பனை செய்திருந்தேன். திருமணத்திற்கு பிறகு எப்படி வாழ்க்கையை வாழலாம் என்று என் மனதில் திட்டமிட்டு வைத்திருந்தேன்.
திடீரென்று என்னால் அவளையோ அல்லது அவளது குடும்பத்தையோ தொடர்பு கொள்ள முடியவில்லை... என்ன காரணம் என்று தெரியாமல் நான் அவளது உறவினரை அழைத்துக்கேட்டேன். அவளுக்கு உடல்நிலை சரியில்லை ஆகையால் அவள் அவர் மருத்துவமனையில் இருப்பதாக உறவினர் என்னிடம் கூறினார். உடனே நான் மருத்துவமனைக்கு சென்றேன்.
அவள் என் கனவுகளின் தேவதை. பின்னர், அவள் கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவின் இறுதி கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இது எங்களுக்கு முழு அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், இரண்டே மாதங்களில் அவள் இறந்துவிட்டாள். நான் உடைந்து நொறுங்கிவிட்டேன். அப்போது அவருக்கு 18 வயது.
அவள் இல்லாத ஒரு உலகத்தை என்னால் ஏற்கமுடியவில்லை. அவள் போய்விட்டாள் என்பதை ஏற்க மறுத்தேன். நீண்ட காலம் வரை அவள் நினைவுகளிலிருந்து என்னால் வெளியேவர முடியவில்லை" என்று அவர் கூறியிருக்கிறார்.