இந்தியா

விஸ்வ இந்து மகாசபா மாநிலத் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

webteam

விஸ்வ இந்து மகாசபா மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்து மகாசபா மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் லக்னோ நகர மைய பகுதியான ஹஸ்ரத் கஞ்சியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த சிலர் அவரை துப்பாக்கியால் சூட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் லக்னோவின் ஹஸ்ரத் கஞ்சில் உள்ள சி.டி.ஆர்.ஐ கட்டிடத்தின் அருகே நடந்துள்ளது. ரஞ்சித் பச்சன் கோரக்பூரில் வசித்து வருகிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில், ரஞ்சித் பச்சனின் சகோதரருக்கும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உத்தரபிரதேச தலைநகரின் மத்திய பகுதியில் அதிகாலையில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய லக்னோவின் டி.சி.பி தினேஷ் சிங் குறிப்பிடுகையில், “ரஞ்சித் பச்சன் என்பவரின் உடல்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் காலை நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றபோதுதான் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை விசாரிப்பதற்காக ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை உடனடியாக ராஜினாமா செய்ய அக்கட்சி கோரியுள்ளது.