இந்தியா

கைது செய்யப்படுகிறாரா கார்த்தி சிதம்பரம்? - முன் பிணை கோரி தொடர்ந்த மனு தள்ளுபடி

சங்கீதா

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், முன் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணிபுரிவதற்கான விசாவை பெற்றுத்தர 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதே வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்ய தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய கடந்த 30-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் கைது செய்வதற்கான தடையை நீட்டித்த நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான உத்தரவு பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முன் பிணை கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் இந்த வழக்கில் கார்த்தியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.