இந்தியா

வேலை பார்க்கவிடாமல் கேரள ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: வைரல் போட்டோ

வேலை பார்க்கவிடாமல் கேரள ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: வைரல் போட்டோ

Rasus

சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலீசார் பாதுகாப்புடன் 50 வயதிற்குட்பட்ட இரண்டு பெண்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனைக் கண்டித்து கேரளத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதனை படம்பிடித்த பெண் ஒளிப்பதிவாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெண்கள் சிலர் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலை செல்ல முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களால் சபரிமலையின் சன்னிதானம் வரை செல்ல முடியவில்லை. இதனிடையே 50 வயதிற்குட்பட்ட கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள போலீசார் உதவியுடன் சபரிமலையில் நேற்று தரிசனம் செய்தனர். இது கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. போராட்டத்தை செய்தியாக்கும் முயற்சியில் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண்ஒளிப்பதிவாளரான ஷாஜிலா அப்துல்ரஹ்மான், அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல், பெண் என்றும் பாராமல் அந்தப் பெண் புகைப்பட நிருபரை பின்னால் இருந்து எட்டி உதைத்துள்ளனர். அத்துடன் அவரை தகாத வார்த்தைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஆனால் அவர்ளை சிறிதும் கண்டுகொள்ளாத ஷாஜிலா அப்துல் ரஹ்மான், போராட்டத்தை செய்தியாக்குவதில் கவனமாக இருந்துள்ளார். வீடியோ எடுக்கும்போதே போராட்டக்காரர்களின் தாக்குதல் காரணமாக ஷாஜிலா அழுதுகொண்டே வேலை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பெண் கூறும்போது, “யாரென்று தெரியாத சிலர் என்னை பின்னால் இருந்து எட்டி உதைத்தனர். ஒருநிமிடத்தில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு கசப்பான அனுபவம். அத்தோடு மட்டுமில்லாமல் உதைத்ததால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டேன். சிலர் என்னிடமிருந்து கேமராவை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் என் பலத்தை கொடுத்து கேமராவை காப்பாற்றிவிட்டேன். அவர்கள் தாக்கியதில் என் கழுத்துப் பகுதிகளிலும் காயம் ஏற்பட்டது” என்கிறார் வேதனையுடன் பெண் ஒளிப்பதிவாளர் நிருபரா ஷாஜிலா.

தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஷாஜிலாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாஜகவை கண்டு தான் பயப்படபோவதில்லை எனவும் போராட்டத்தை தொடர்ந்து செய்தியாக்க உள்ளதாகவும் அந்தப் பெண் நிருபர் துணிச்சலுடன் கூறியுள்ளார்.