இந்தியா

உ.பி.யில் தீவிரமாக பரவம் டெங்கு: ஒரே வாரத்தில் 32 குழந்தைகள் உயிரிழப்பு

JustinDurai
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டதில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் நகரில் அடையாளம் தெரியாத மர்மக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இதில் 32 பேர் குழந்தைகள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால், அதை டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். காய்ச்சல் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இருப்பினும் இதுவரை கொரோனாவுக்கும் இந்த மர்ம காய்ச்சலுக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் டெங்கு தடுப்புப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுவதைத் தொடர்ந்து ஆக்ரா, மெயின்புரி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஃபிரோசாபாத் மாவட்டத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை, 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது என அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.