இந்தியா

மிரட்டல்களை ஏற்கமுடியாது: பத்மாவதி விவகாரம் பற்றி வெங்கையா நாயுடு

rajakannan

ஜனநாயக நாட்டில் வன்முறையை ஏற்படுத்தும் மிரட்டல்கள் ஏற்புடையதல்ல என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெங்கையா நாயுடு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால், பத்மாவதி படத்தின் பெயரை கடைசி வரை குறிப்பிடாமல் பொதுப்படையாகவே பேசினார்.

“சமீப காலமாக சில திரைப்படங்களை எதிர்த்து போரட்டங்கள் நடைபெறுகின்றன. மத, ஜாதிய உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டங்களுக்கு இடையே சிலர் எல்லைமீறி தலையை வெட்டி வருபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதோ.. இல்லையோ.. சந்தேகம்தான். ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் என தொகை அறிவிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் என்பது அவ்வளவு எளிதா? இத்தகைய மிரட்டல்கள் ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. போராடுவதற்கு உரிமை உண்டு. உரிய முறையில் அதிகாரிகளிடம் சென்று முறையிட வேண்டும். வன்முறையை தூண்டும் மிரட்டல்கள் கூடாது. சட்டத்தின் ஆட்சியை வலுவிழக்க செய்வதை எச்சரிக்கிறேன்" என்று வெங்கையா நாயுடு கூறினார்.

அதே சமயத்தில், இந்த விஷயத்தை மதத்துடன் தொடர்புபடுத்துவது தவறு என்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் ஆரோக்கியமானதுதான். ஆனால் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது. திரைப்படமும், கலையும் பொதுவானவை” என்றும் கூறினார்.