மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்ற மறுநாளே மீண்டும் வன்முறை  web
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. புதிய முதல்வர் பதவியேற்ற மறுநாளே வன்முறை!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்டு புதிய முதல்வர் பதவியேற்ற மறுநாளே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

Rishan Vengai

மணிப்பூரில் புதிய முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் கலவரம் வெடித்தது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

வன்முறை சம்பவங்கள்

மாநிலம் முழுவதும் உள்ள 351 நிவாரண முகாம்களில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வசிக்கின்றனர். அண்டை மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பமால் இருந்துவந்தது.

மணிப்பூர் வன்முறை

இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் மீண்டும் கலவரம்..

இந்த நிலையில், மணிப்பூரில் பிப்ரவரி 12ஆம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்ய இருந்தது. இதையடுத்து, அங்கு மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியது.

மணிப்பூரின் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வு

இந்நிலையில் மணிப்பூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி மணிப்பூரின் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றார். ஒரு வருடத்திற்கு பிறகு மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சி அமலுக்கு வந்தது.

ஆனால் புதிய முதல்வராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. புதிய முதல்வர் பதவியேற்ற மறுநாளே மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டு பொதுச் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குக்கி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அமைதியை நிலைநாட்ட காவல்துறை, துணை ராணுவ படைகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.