Pawan Kumar Chandana x page
இந்தியா

விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட்.. வெற்றியில் ’இந்தியாவின் எலான் மஸ்க்’.. பவன் குமார் சந்தனா யார்?

இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பிற்கு ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்தவர் இவர்தான். அதனால்தான் இவர், ’இந்தியாவின் எலான் மஸ்க்’ என்று அழைக்கப்படுகிறார்.

Prakash J

அரசு நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ராக்கெட் தொழில்நுட்பத்தை, தனியார் நிறுவனங்களாலும் மிகக் குறைந்த செலவில் சர்வதேசத் தரத்துடன் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் பவன்குமார் சந்தனா. யார் இவர், வாருங்கள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை இன்று, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் முழுமையாக தாங்களே வடிவமைத்து உருவாக்கிய இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-1, இன்று காலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதன்மூலம், ஆர்பிட்டல் வகை ராக்கெட்டை ஏவிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெற்றுள்ளது. இதன் வெற்றிகரமான பயணத்தின் பின் நின்றவர், பவன் குமார் சந்தனா (Pawan Kumar Chandana). ஆம், இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பிற்கு ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்தவர் இவர்தான். அதனால்தான் இவர், ’இந்தியாவின் எலான் மஸ்க்’ என்று அழைக்கப்படுகிறார்.

'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' (Skyroot Aerospace)இன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO)அதிகாரியான இவர், 1991ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் பள்ளிப்படிப்பில் கணிதப் பாடத்தில் வெறும் 51 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற இவர், தனது தந்தையின் ஊக்கத்தினால் ஐஐடி காரக்பூரில் (IIT Kharagpur) சேர்ந்தார். அங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (B.Tech) மற்றும் தெர்மல் இன்ஜினியரிங் (M.Tech) ஆகிய இரட்டைப் பட்டப் படிப்புகளை 2012இல் நிறைவு செய்தார்.

படிப்பை முடித்தவுடன் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிக சம்பள வேலைகளைத் தவிர்த்துவிட்டு, ராக்கெட்டுகள் மீதான ஆர்வத்தால் 2012இல் இஸ்ரோவில் (ISRO) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினார். இஸ்ரோவின் SSLV (Small Satellite Launch Vehicle) திட்டத்தின் துணைத் திட்ட மேலாளராகவும் பொறுப்பு வகித்தார். பின்னர், 2018இல் அரசு வேலையைத் துறைந்த அவர், தனது சக இஸ்ரோ விஞ்ஞானியான நாக பாரத் தாகா (Naga Bharath Daka) என்பவருடன் இணைந்து ஹைதராபாத்தில் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தைத் தொடங்கினார்.

இருவரும், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதை எளிமையாக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு 2020ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல்முறையாகத் தனியார் துறையில் ஒரு ராக்கெட் இன்ஜினையும் (Raman-1), அதைத் தொடர்ந்து கிரையோஜெனிக் இன்ஜினான தவான்-1 (Dhawan-1)-ஐயும் வெற்றிகரமாகச் சோதனை செய்து வரலாறு படைத்தனர். அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு, 'மிஷன் பிராரம்பா' (Mission Prarambh) என்ற திட்டத்தின்கீழ், இந்தியாவின் முதல் தனியார் சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டான 'விக்ரம்-எஸ்' ராக்கெட்டை ஏவினர். தற்போது 'விக்ரம்-1' ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.