இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை புதிய மைல்கல்லை எட்டத் தயாராகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் முழுமையாக தாங்களே வடிவமைத்து உருவாக்கிய இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ வரும் சனிக்கிழமை காலை விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய மண்ணிலிருந்து ஆர்பிட்டல் வகை ராக்கெட்டை ஏவிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறும்.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2022-ஆம் ஆண்டு விக்ரம்-எஸ் என்ற இந்தியாவின் முதல் தனியார் சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது. அந்த ராக்கெட் சுமார் 89.5 கிலோமீட்டர் உயரம் வரை சென்று சாதனை படைத்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஆர்பிட்டல் வகை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அடுத்த முக்கிய கட்டத்தை நோக்கி நிறுவனம் முன்னேறியுள்ளது. இதன் விளைவாக உருவானதே விக்ரம்-1.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள விக்ரம்-1 ராக்கெட், சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ஏவுதல் “மிஷன் ஆகமன்” என்ற பெயரில் நடைபெறுகிறது.
விக்ரம்-1 ராக்கெட்டின் முக்கிய சிறப்பம்சம், அது முழுமையாக இலகுரக கார்பன் காம்போசிட் பொருளால் உருவாக்கப்பட்டிருப்பதுதான். இந்த தொழில்நுட்பம் ராக்கெட்டின் எடையை கணிசமாகக் குறைத்து, அதிக செயல்திறன் மற்றும் குறைந்த செலவில் ஏவுதலை மேற்கொள்ள உதவுகிறது. இந்த ராக்கெட் 3 திட எரிபொருள் நிலைகளைக் கொண்டது. இறுதி சுற்றுப்பாதை திருத்தங்களுக்காக ஒரு திரவ எரிபொருள் அட்ஜஸ்ட்மென்ட் மாட்யூலை கொண்டுள்ளது.Vikram-1
விக்ரம்-1 ராக்கெட், 350 கிலோ வரை எடையுள்ள செயற்கைக்கோள் அல்லது ஆய்வு சாதனங்களை 450 கிலோமீட்டர் உயரம் கொண்ட குறைந்த பூமி சுற்றுப்பாதையில் 60 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதலில் தொழில்நுட்ப சோதனைப் பயனீடுகளாக 4 கருவிகளும், தங்க கலை பொருளும் எடுத்துச் செல்லப்படுகிறது. அதாவது இந்தியா சார்பில் முதல்முறையாக விண்வெளிக்கு கலைப் பொருளை எடுத்துச் செல்லும் ராக்கெட் என்கிற பெருமையையும் இது பெறுகிறது.
18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மைக்ரோ கலைப்பொருளில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன், டாக்டர் விக்ரம் சாராபாய், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரின் நுண்ணிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இவை விண்வெளிக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, விக்ரம்-1 ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு ஏவுதளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட வாகன சோதனைகள், தொலைஅளவீட்டு அமைப்புகள், தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. எட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட ஸ்கை ரூட் நிறுவனம் தற்போது ஒரு முழு செயற்கைக்கோளையே வடிவமைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போல வருங்காலத்தில் இந்தியாவில் ஸ்கைரூட்ஸ் வளரும் எனவும் எதிர்பார்க்கப்படுவதோடு இந்த திட்டம் வெற்றியடைந்தால் இது இந்திய விண்வெளி துறையின் மைல்கல்லாக பார்க்கப்படும்.