போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபேவுக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலை, ஆள் கடத்தல் , நிலமோசடி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறையினர் சென்றனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த துபே, காவல்துறை அதிகாரி உட்பட 8 காவலர்களை சுட்டுக்கொன்று தப்பியோடினார். நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவத்தில், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த விகாஸ் துபே, உத்தரப்பிரதேச சிறப்புப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது மழை பெய்ததால், விகாஸ் துபே இருந்த கார் விபத்துக்குள்ளானதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர் தப்ப முயன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்ததாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விகாஸ் துபேவுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் விகாஸ் துபேவுக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கொல்லப்பட்ட குண்டர்களின் உடல் கான்பூரில் உள்ள ஹாலெட் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அவரது தாய் சர்லா துபே லக்னோவில் இருக்கிறார். அவரது மனைவி ரிச்சா துபே மற்றும் மகன் கான்பூரில் உள்ள போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். வியாழக்கிழமை மாலை அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது சகோதரர் டீப் பிரகாஷ் துபே தலைமறைவாக உள்ளார்.