விஜய் - ராம்தாஸ் அத்வாலே web
இந்தியா

”விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவேண்டும்..” மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு!

தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார்.

PT WEB

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தமிழகம் மற்றும் தலித்–பகுஜன் மக்களின் நலனுக்காக விஜய் தலைமையிலான தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக நீதி கொள்கைகளுக்கும் வலுவான முடிவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் நலனுக்காக தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவேண்டும் என்று மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ராம்தாஸ் அத்வாலே, ”சென்னையிலும் முழு தமிழ்நாட்டிலும் மக்கள் மாற்றம் வேண்டும்னு தீவிர ஆசை வைத்திருக்காங்க. ஆனா அந்த மாற்றம் உறுதியானதும், நிலைத்ததும், பயன் தரக்கூடியதுமாக இருக்கணும் என்பதுதான் அவர்களோட எதிர்பார்ப்பு. தென்னிந்திய அரசியல் என்பது சுயமரியாதை, சமூக நீதி, பிராந்திய அச்மிதை ஆகியவற்றோட இணைந்தது. அதனால வெறும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுகள் போதாது வலுவான அரசியல் திசையும், ஆட்சியில் நேரடி மற்றும் பலமான பங்கும் அவசியம். இந்த பின்னணியில் Vijay (Thalapathy Vijay) அவர்கள் Tamilaga Vettri Kazhagam (TVK) ஆரம்பித்து அரசியலுக்கு வந்திருக்காங்க. இளைஞர்களிடையே பெரிய உற்சாகம் உருவாகி இருக்கிறது; அவர்களுடைய நிலைப்பாட்டில் அம்பேத்கரிய சிந்தனையின் தாக்கம் தெரிகிறது.

தமிழ்நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கும், தலித்–பகுஜன் மக்களின் உரிமைகளுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) உடன் சேர்வது ஒரு பலமான மற்றும் பயனுள்ள முடிவாக இருக்கும். மத்திய–மாநில ஒருங்கிணைப்பு அதிகரித்தால் வளர்ச்சி திட்டங்களுக்கு வேகம் கிடைக்கும், நிதி அதிகரிக்கும், சமூக நீதி கொள்கைகளுக்கு வலு சேரும். அதனால் தான் நான், தளபதி விஜய் அவர்கள் NDA உடன் சேர்ந்து தமிழ்நாட்டின் மாற்றத்துக்கு தீர்மானமான பங்கு எடுக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்துவரையில் புதியதாக களம்கண்டிருக்கும் விஜய் தலைமையிலான தவெக, யார் வெற்றிபெறவேண்டும் என்பதை தீர்மானிக்கும் ஆட்டக்குலைப்பராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முயற்சியில் பல்வேறு செயல்பாடுகளை திமுக செயல்படுத்திவரும் நிலையில், தவெக தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைத்து திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வருகிறது. நேற்று தமிழிசை சௌந்தரராஜன் தவெக தலைவர் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைத்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும் அழைப்பு விடுத்துள்ளார்.