விஜய் மல்லையா முகநூல்
இந்தியா

விஜய் மல்லையா கடன் வசூல் தொகை.. வங்கிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

விஜய் மல்லையாவின் கடன் வசூல் தொடர்பான அறிக்கை குறித்து தாக்கல் செய்ய வங்கிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Prakash J

இந்தியாவில் உள்ள 17-க்கும் மேற்பட்ட வங்கிகளில், கிட்டத்தட்ட ரூ.9000 கோடிக்கு மேலாக தொழிலதிபரான விஜய் மல்லையா கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பித் தராமல் இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். தற்போது லண்டனில் வசித்துவரும் அவரை, நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

எனினும், வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பியோடியதால், அவர் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு ஈடாக அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன. இந்த நிலையில், வங்கிகளிடமிருந்து கடன் வசூல் கணக்குகளைக் காட்டக் கோரி விஜய் மல்லையா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விஜய் மல்லையா

இந்த மனு மீதான விசாரணையில் மல்லையா சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ”கடன் மீட்பு தீர்ப்பாயம் (DRT) ரூ.6.200 கோடியைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவரின் சொத்துக்களை விற்று ரூ.14,000 கோடியை வங்கி வசூலித்துள்ளது.

முன்னதாக, கடன் வசூல் அதிகாரி ரூ.10,200 கோடி வரை மல்லையாவிடம் வசூலுளித்துள்ளார். எனவே, வசூலிக்கப்பட்ட கடன் தொகை குறித்த அறிக்கையை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். தவிர, மக்களவையில் மல்லையாவை ஒரு பொருளாதார குற்றவாளி எனவும் கூறுகின்றனர்” என்று மல்லையா தரப்பு வாதம் வைத்தது. மல்லையாவின் மனுவின் அடிப்படையில், நீதிபதி ஆர்.தேவதாஸ் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, வங்கிகள் மற்றும் கடன் வசூல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.