இந்தியா

விஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்?

விஜய் மல்லையா இவ்வளவு நாள் எப்படி வெளிநாடுகளில் தங்கினார்?

rajakannan

இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதும், இந்திய அமலாக்க மற்றும் சிபிஐ அமைப்புகள் பெரு மூச்சு ஒன்றினை விட்டிருக்கும். ஏனெனில் மல்லையாவை இதுவரை இந்தியாவுக்கு கொண்டு வரமுடியாதது ஏன்? என்ற கேள்வி அத்தனை பேர் கேட்டுவிட்டார்கள். அத்தனை அழுத்தங்களுக்கு நடுவே மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த பலன் தான் இது. மல்லையாவை அழைத்துவர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டுக்குழு ஒன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால், லண்டன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு செய்ய தொழிலதிபதிபர் விஜய் மல்லையாவுக்கு வாய்ப்புள்ளது. ஆகவே அடுத்தடுத்த திருப்பங்கள் அதிரடியாக நிகழலாம்.

பிரிட்டனில் மல்லையா எப்படி சுதந்திரமாக வாழ்ந்தார்?

ஒருநாட்டின் சட்டத்தை மீறி, அங்கிருந்து தப்பிவந்த நபர் எப்படி மற்றொரு நாட்டில் சுதந்திரமாக வாழ்ந்தார் என்ற கேள்வி விஜய் மல்லையா விவகாரத்தில் இயல்பாக எழும். அந்தக் கேள்விக்கு பதில் மிகவும் எளிமையானது. பிரிட்டன் நீதிமன்றத்தில் மல்லையா குற்றம் இழைத்திருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை இருநாடுகளுக்கு இடையே தொடங்க முடியும். மேல்முறையீடு வரை அத்தனை சட்ட நடைமுறைகளும் முழுமையாக முடிந்த பிறகுதான், நாடு கடத்துவதற்கான பணிகள் தொடங்கும். 

பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி லண்டனில் வாழ்ந்தார்?

மல்லையாவின் பாஸ்போர்ட்டை இந்தியா ரத்து செய்தாலும், குடியமறுதல் சட்டம் 1971-ன் கீழ், அந்த பாஸ்போர்ட்டின் காலாவதி தேதி வரை அவர் பிரிட்டனில் வாழலாம். பிரிட்டன் அரசு அவரை உள்ளே நுழைய அனுமதி அளிக்கும் வரை இது தொடரும். விசா காலாவதி ஆனதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், 1992 முதல் விஜய் மல்லையாவிடம் பிரிட்டன் குடியுரிமை உள்ளது. அந்தக் குடியுரிமையுடன் அவர் எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் பிரிட்டனில் இருக்கலாம். 

அதனால், மற்ற நாடுகளில் பொருளாதார குற்றங்களை செய்து விட்டு லண்டனுக்கு குடிபெயரும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டங்களை திருத்த வேண்டும். அதனால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு அவ்வளவு எளிதில் குடியுரிமை வழங்கக் கூடாது. அப்படி செய்வதுதான் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டு வருகின்றது.  

இந்திய அரசுக்காக லண்டன் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள் நாடு கடத்துவது தொடர்பாக இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையேயான 1993 ஒப்பந்தத்தில் உள்ள பிரிவு 9இன் கீழ் உள்ள சரத்துகளை கொண்டு வாதிட்டனர். 

சட்டமும் வாதத் திறமையும்

என்னதான் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும், சில இடங்களில் சட்ட நுணுக்கங்களை தங்களுடைய வாதத் திறமையால் தங்கள் கட்சிக்காரருக்கு சாதகமாக வழக்கறிஞர்கள் பயன்படுத்துகின்றனர். இதுதான், மல்லையா விவகாரத்திலும் நடந்தது. அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்கும் நடவடிக்கைதான் இது என்பது உள்ளிட்ட பல்வேறு வாதங்களை அவர்கள் முன் வைத்தனர். இதுவும் இத்தனை நாட்கள் தாமதமானதற்கான காரணமாக அமைந்தது.