இந்தியா

மூழ்கிய கப்பலில் சிக்கிய 6 பணியாளர்கள்: அசத்தலாக மீட்ட கடலோர காவல்படை! வைரல் வீடியோ

ச. முத்துகிருஷ்ணன்

இன்று அதிகாலை 3 மணியளவில் அரபிக் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 6 பணியாளர்களை கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது.

நேற்று இரவு கேரளாவின் பேப்பூரில் இருந்து லட்சத்தீவில் உள்ள ஆந்த்ரோத்துக்கு எம்.எஸ்.வி மலபார் லைட் எனும் சரக்குக் கப்பல் ஒன்று பயணித்தது. கட்டுமானப் பொருட்கள், கால்நடைகள், பசுக்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு அந்த கப்பல் புறப்பட்டது. ஆனால் பேப்பூர் கடற்கரையில் இருந்து 8 மைல் தூரம் பயணித்த பிறகு, நள்ளிரவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஞ்ஜின் அறையில் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த கப்பலும் மூழ்கத் துவங்கியதால் அதிர்ச்சியடைந்த பணியாளார்கள் உடனடியாக கடல் சார் மீட்பு மையத்திற்கு தகவல் அனுப்பினர்.

மீட்புப்படை வருவதற்குள் கப்பல் மொத்தமாக மூழ்கியதால், பணியாளர்கள் உயிர் காக்கும் படகில் ஏறி நடுக்கடலில் உயிருக்கு போராடத் துவங்கினர். இந்திய கடலோர காவல்படை இடைமறிப்பு படகு C-404, இன்று அதிகாலை 3 மணியளவில் நடுக்கடலில் தவித்த பணியாளர்களை மீட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் அனைத்து பணியாளர்களும் நலமுடன் இருப்பதாகவும் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. நடுக்கடலில் உயிர் காக்கும் படகில் இருந்த பணியாளர்களை கடலோர காவல் படை மீட்கும் வீடியோவை அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.