இந்தியா

இந்தியாவில் ஏப்.15-க்குள் 50,000 உயிரிழப்புகளா? - போலிச் செய்தியை மறுத்த WHO அமைப்பு

webteam

இந்தியாவில் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் 50,000 உயிரிழப்புகள் ஏற்படும் என்று பரவிய தகவலை போலிச் செய்தி என்று விளக்கம் அளித்துள்ளது ஐ.நா-வின் உலக சுகாதார அமைப்பு.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரே நாளில் 96,982 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,25,89,067-லிருந்து 1,26,86,049 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 446 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,65,101-லிருந்து 1,65,547 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கொரோனா தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தத்தாக ஒரு தகவல் உலா வந்தது. ``இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 15-ம் தேதிக்குள் 50,000 பேர் உயிரிழப்பார்கள்" என்பதுதான் அந்த தகவல். வீடியோவில் சொல்லப்பட்ட அந்த தகவல் இணையங்களில் உலா வந்தது.

ஆனால், இந்தத் தகவலை உலக சுகாதார மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, ``அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 15-ம் தேதிக்குள் 50 ஆயிரம் பேர் இந்தியாவில் உயிரிழப்பார்கள் என்று வெளியாகி இருக்கும் செய்தி போலிச் செய்தி. இது தொடர்பாக எந்த எச்சரிக்கையயும் எங்கள் சார்பில் வெளியிடவில்லை" என்று விளக்கம் கொடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரியில்தான் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ், ``உலக நாடுகளுக்கு தடுப்பூசி அளித்து வரும் இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி வரும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது. மற்ற நாடுகளும் இந்தியாவின் செயலைப் பின்பற்ற வேண்டும்" என்று பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.