திருவிழாக்களுக்கு பஞ்சமில்லாத தேசம் இந்தியா. அதுவும் கும்பமேளா என்றால் கேட்கவே வேண்டாம். கோடிகளில் மக்கள் குவிவார்கள்.
இந்தாண்டு மகா கும்பமேளாவிற்கு 45 கோடி பேர்
வருவார்கள் என்ற தகவல் மலைக்க வைக்கும் நிலையில் மறுபுறம் இங்கு வந்துள்ள விதவிதமான துறவிகள்
வியக்க வைக்கின்றனர். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள்
சங்கமத்தில் நீராடி பாவத்தை தொலைப்பதற்காக பிரயாக் ராஜில் குவிகின்றனர் மக்கள். இவர்கள் மட்டுமல்ல...நாட்டின் பல பகுதிகளில் உள்ள துறவிகளும் இவ்விழாவிற்கு வந்துள்ளனர். விதவிதமான தோற்றங்களில் வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு விநோதமான பெயர்களும்
உண்டு.
அம்பாசடர் பாபா
இவர்களில் ஓருவர்தான் அம்பாசடர் பாபா. காவி நிற அம்பாசடர் காரில் 53 ஆண்டாக நாடெங்கும் பயணித்து ஆன்மிக பணியாற்றி வருகிறார் இந்த துறவி. இதனாலேயே இவர் பெயர்
அம்பாசடர் பாபா.
சோட்டு பாபா.
இவரது உயரம் 3 அடி அங்குலம் மட்டுமே. இவர் குளித்து 32 ஆண்டுகள் ஆகிறதாம். தான் கடைப்பிடிக்கும் ஹடயோகத்தை
பின்பற்றி குளிப்பதையே கைவிட்டுவிட்டதாக கூறுகிறார் சோட்டு
பாபா.
ருத்ராக்ஷ பாபா
பக்தர்களை கவர்ந்திழுக்கும் மற்றொரு துறவி ருத்ராக்ஷ பாபா. இவர் 11 ஆயிரம் ருத்ராக்ஷ கொட்டைகள் கொண்ட 108 மாலைகளை கழுத்தில் அணிந்து நடமாடி வருகிறார் இவர். இந்த
மாலைகளின் எடை 30 கிலோவாம்.
அனஜ்வாலே பாபா
துறவிகள் என்றால் ஆன்மிகவாதிகள் என்றுதான் தெரியும்.
ஆனால் இந்த துறவி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் உள்ளவர்.
அனஜ்வாலே பாபா என்ற இவர் தலையில் ஒரு மினி தோட்டத்தையே வளர்த்து வைத்துள்ளார். பயிர்களை தலையில் வளர்த்து சூழல் காப்பதின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதாக கூறுகிறார் இந்த பாபா.
திகம்பர் நாகா பாபா
இன்னொரு பாபா நம்மை திகைக்க வைக்கிறார். திகம்பர் நாகா
பாபா என்ற இவர் உயர்த்திய ஒரு கையை 5 ஆண்டுகளாக கீழே இறக்கவே இல்லையாம். சனாதன தர்மத்தை தாங்கிப்பிடிக்கவே இந்த முடிவு என்கிறார் இவர்.
சாபி வாலே பாபா
இவர் மெகா சைஸ் சாவியுடன் நடமாடி வருகிறார். மன அமைதியின் திறவுகோல் இதுதான் என விளக்கம் தருகிறார் சாபிவாலே பாபா.
மோக்ஷபுரி பாபா
நம் நாட்டிலிருந்துதான் என்றில்லை... அமெரிக்காவிலிருந்தும்
ரஷ்யாவிலிருந்தும் கூட துறவிகள் இங்கு வந்துள்ளனர். மோக்ஷபுரி பாபா என்ற இந்த துறவியின் இயற்பெயர் மைக்கேல். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இந்து மத சித்தாந்தங்களால் கவரப்பட்டு துறவியாகிவிட்டார்.
மஸ்குலின் பாபா
இந்த துறவி ரஷ்யாக்காரர். 7 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக
இருக்கும் இவர் 30 ஆண்டுகளாகவே இந்து மதத்திற்கு மாறி நேபாளத்தில் தங்கியிருந்து ஆன்மிக பணிகளை செய்து வருகிறார்.
இந்த பட்டியல் இதோடு முடிந்துவில்லை. ஸ்பிளென்டர் பாபா, இ ரிக்ஷா பாபா, கம்ப்யூட்டர் பாபா , ஐஐடி பாபா, முள் படுக்கை பாபா என ஏராளமான பாபாக்களை பிரயாக் ராஜ் வீதிகளில் காண முடிகிறது.