இந்தியா

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு - பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை!

ச. முத்துகிருஷ்ணன்

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு காசியாபாத் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006 ஆம் ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாரணாசியில் இந்து பல்கலைக்கழகம், அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்பு காரணம் என்று தெரியவந்தது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி வலியுல்லா கானை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு காசியாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.