இந்தியா

வாரணாசி மசூதி இட விவகாரம்: தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில், காசி விஸ்வநாதர் ஆலயம் இருந்ததா என ஆய்வு செய்து அறிக்கை வழங்க இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகலாய மன்னர் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி விட்டு மசூதியை கட்டினார் என்றும், ஞானவாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமானது எனவும் கோரி வழக்கறிஞர் விஜய் சங்கர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், மகாராஜா விக்ரமாதித்யா 2,050 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் குறிப்பிட்ட நிலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை கட்டினார் என்றும், அதன் ஒரு பகுதியை முகலாய பேரரசர் ஒளரங்கசீப் 1664-ஆம் ஆண்டு இடித்து விட்டு ஞானவாபி என்ற மசூதியை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மசூதி கட்டப்பட்டுள்ள அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தமானது என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஞானவாபி மசூதி நிர்வாகக் குழு மறுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், அந்த நிலத்தில் ஞானவாபி மசூதி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே காசி விஸ்வநாதர் ஆலயம் அமைக்கப்பட்டிருந்ததா என இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை ஆய்வு நடத்த சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் கீழ் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை உத்தரப் பிரதேச அரசு நியமித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அந்தக் குழுவில் குறைந்தது இரண்டு நபர்களாவது சிறுபான்மையினராக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று உத்தரப் பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது.