இந்தியா

பாஜக முன்னாள் எம்.எல்.ஏவை தாக்கிய மாணவியின் உறவினர்கள்... நடந்தது என்ன?

webteam

வாரணாசியில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, சாபிபூரில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் முதல்வர் மாயா ஷங்கர் பதக். வாரணாசி தொகுதியின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ வான இவர் இரு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

70 வயதான பதக் தனது கல்லூரியில் படிக்கும் மாணவி குறித்து கருத்து தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனை அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் கூற, அவரது குடும்பத்தினரும் இன்னும் சில நபர்களும் கல்லூரிக்கு வந்து பதக்கை  தாக்கப் முற்பட்டனர் . இதனால் பதக்குக்கும் சம்பந்தப்பட்ட பெண் குடும்பத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் பதக் தன் காதைப் பிடித்துக்கொண்டு, பெண் குடும்பத்தினரிடம்  மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவல்துறையினர் பதக்கை தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் பதக்கோ இது தொடர்பாக தான் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் பதக்கை தாக்கிய மாணவியின் குடும்பத்தினரும், அவர் மீது புகார் அளிக்க மறுத்து விட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி பாஜக தலைவர் ஹான்ஸ் ராஜ் விஸ்வகர்மா கூறும்போது, “ பதக் இரு முறை வாரணாசி சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை” என்றார்.