செய்தியாளர் - கார்த்திகேயன்
இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் காஷ்மீரை இணைப்பதற்காக உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருந்தது. 43,780 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 272 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் வழித்தடங்கள், இமயமலையின் கடினமான பகுதிகளில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த 272 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் வழித்தடம் ஒரே பாதையாக இல்லாமல், 4 வழித்தடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 111 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கத்ரா - பனிஹால் வரையிலான வழித்தடம்தான், மிகவும் சவாலான வழித்தடம் என்று கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தில்தான், உலகின் மிக உயரமான செனாப் பாலமும், இந்தியாவின் முதல் கேபிள் பாலமான அஞ்சியும் இடம்பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில், 75 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வந்தே பாரத் ரயில் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது, இந்த வேகம் 100 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில், இந்த புதிய வேக வரம்பு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி செய்துள்ளார்.
கத்ரா மற்றும் ஸ்ரீநகர் இடையே இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில், இமயமலையின் கடுமையான குளிர்காலச் சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை -20 டிகிரி செல்சியஸிற்குக் கீழே குறைந்தாலும் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது. நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ள இந்தப் பகுதியில் அதிர்வுகளைக் குறைக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நிலநடுக்கத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, குளிர்காலத்தில் பயணிகளின் வசதிக்காக சூடான கண்ணாடிகள், மேம்பட்ட வெப்பமூட்டும் அமைப்புகள், அதிநவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை, அந்த வந்தே பாரத் ரயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மிகவும் கடினமான ரயில் வழித்தடங்களில் ஒன்றாக உள்ள கத்ரா - பனிஹால் வழித்தடத்தில், இந்த சாதனையை இந்தியா செய்திருப்பது, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.