video image x page
இந்தியா

உ.பி. | வந்தே பாரத் ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ! #viralvideo

வந்தே பாரத் ரயிலில் இருக்கையை மாற்ற மறுத்ததற்காக பாஜக எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் பயணி ஒருவரைத் தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

பயணிகளின் விரைவான பயணச் சேவையைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏவான ராஜீவ் சிங், தன் குடும்பத்தினருடன் தனது தொகுதிக்குச் சென்றுள்ளார்.

video image

அப்போதுதான் அந்தப் பயணி அமர்ந்திருந்த இருக்கையை தன் குடும்பத்தாருக்கு மாற்றித் தரும்படி எம்.எல்.ஏ. கேட்டதாகவும், அதற்கு அந்தப் பயணி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங், அந்தப் பயணியை தனது ஆதரவாளர்களுடன் தாக்கியுள்ளார். இதற்காக, அந்த எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுக்கு போன் செய்து ஜான்சி ரயில் நிலையத்தில் அவர்களை ஏற்றியதாகத் தெரிகிறது. இதில், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், ”ரயிலில் ஜன்னல் இருக்கை கொடுக்காததற்காக பாஜக எம்எல்ஏ @rajeevsinghmla ஒரு பயணியை அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். எம்எல்ஏ, பிரதமர் மோடிக்கும் ஷா சாஹேப்பிற்கும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்தச் சம்பவம் குறித்து பாஜக இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இருக்கைகளை மாற்றுவது தொடர்பாக இந்த மோதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள ரயில்வே காவல் கண்காணிப்பாளர் (ஜான்சி) விபுல் குமார் ஸ்ரீவஸ்தவா, ”சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங், அறிக்கை (NCR) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார், அதில் பயணி தனது குடும்பத்தினரிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பயணி தரப்பில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை. ஒருவேளை, புகார் வந்தால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.