முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் காலமானார். வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா தீ மூட்டினார்.
டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தலில் இருக்கும் வாஜ்பாயின் அஸ்தியை அவரது வளர்ப்பு மகள் நமிதா மற்றும் பேத்தி நிகாரிகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து கங்கை நதியில் கரைக்கப்பதற்காக டெல்லியிலிருந்து ஹரித்வாருக்கு ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாயின் அஸ்தி கொண்டு வரப்பட்டது. பின்னர் ஹரித்வாரின் முக்கிய சாலைகளின் வழியாக வாஜ்பாயின் அஸ்தி திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
Read Also -> மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு
இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏராளமான பாஜக கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் கங்கை கரையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அங்கு வாஜ்பாயியின் அஸ்தியை குடும்ப உறுப்பினர்கள் கரைத்தனர்.