இந்தியா

மறைந்த வாஜ்பாய் உடல் இன்று தகனம்

மறைந்த வாஜ்பாய் உடல் இன்று தகனம்

Rasus

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை 5 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.

முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 94. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.

வாஜ்பாய் காலமானதையடுத்து, அவரது உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பிற்பகல் ஒரு மணியளவில் வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. மாலை 5 மணியளவில் டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் இறுதிச்சடங்கு மற்றும் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.