திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெற உள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 10 நாட்களுக்கு 8 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் 30ம் தேதி (2025) நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களும் 'வைகுண்ட துவாரம்' எனப்படும் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறித்த முக்கிய முடிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி ஆர் நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முதல்வர் ஆலோசனையின் படி, முதல் மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 30,31, ஜன.1) ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான வி.ஐ.பி. டிக்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்” என தெரிவித்தார்..
இதில், ”முதல் மூன்று நாட்கள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பெற நவம்பர் 27 ம் தேதி முதல் டிசம்பர் 1 ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். சாமி தரிசனம் செய்வதற்கான பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் டிசம்பர் 2 ம் தேதி அவர்கள் (குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள்) ஆன்லைனில் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, “ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 300 ரூபாய் டிக்கெட்கள் ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகளும் ஸ்ரீவாணி விஐபி தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த நாட்களிலும் அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், சிறப்பு தரிசனங்களும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்..
இந்த தரிசன டிக்கெட்களை தமிழ், தெலுங்கு, கனடா, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதை தேவஸ்தான இணையதளம், மொபைல் செயலி, வாட்ஸ் ஆஃப் செயலியில் பதிவு செய்யலாம். இதில் மொத்தம் 10 நாட்களுக்கு 8 லட்சம் டிக்கெட்கள் மற்றும் கீழ் திருப்பதியில் டோக்கன்களும் வழங்கப்படும். 2 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நேரடியாக பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.. முதல் 3 நாட்களுக்கு மட்டும் ஆன்லைனில் இலவச குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.. இதில் முதல் 3 நாட்களான டிசம்பர் 30, 31,ஜன.1 ஆகிய தேதிகளில் டிக்கெட் இல்லாமல் வந்தால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் நிர்வாக தெரிவித்துள்ளது.. .
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன் விநியோகத்தில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த நிலையில், இம்முறை இலவச டிக்கெட்களையும் ஆன்லைனில் விநியோகிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..